Our Feeds


Monday, April 4, 2022

Anonymous

நாட்டின் இன்றைய நிலைக்கு 20க்கு கை தூக்கிய முஸ்லிம் MPக்களும் பொறுப்புக் கூற வேண்டும் - இம்ரான் MP

 



ஜனாதிபதியின் தூர நோக்கற்ற செயற்பாடுகளாலேயே நாடு இன்று பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இதற்கு 20 ஆம் திருத்தத்திற்கு கை தூக்கிய அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரம் மேலும் அதிகரிக்கப்பட்டது. இந்த அதிகாரத்தினை அவர் தன்னிச்சையாகப் பயன்படுத்தியதாலேயே நாடு இன்றைய நிலைக்குத் தள்ளப்பட்டது.


எனவே, ஜனாதிபதிக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் இந்த 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். ஏனெனில் அவர்கள் வழங்கிய ஆதரவே ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்த்தது.


ஜனாதிபதித்தேர்தல் தொடக்கம் பொதுத் தேர்தல் வரை பொதுஜன பெரமுனவோடு இணைந்து பணியாற்றியவர்கள் 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமைக்கு ஏதோ ஒரு வகையில் காரணம் கூற முடியுமாக இருக்கும். 


எனினும், ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் எம்மோடு ஒன்றாக இருந்தவர்கள், தேர்தல் மேடைகளில் எம்மோடு சேர்ந்து ஜனாதிபதிக்கு எதிராக வசைபாடியவர்கள் பாராளுமன்றத்தில் கையில் 20 எதிர்ப்பு அடையாளத்தைப் பொறித்துக் கொண்டிருந்தவர்கள் ஜனாதிபதிக்கு வலுச்சேர்த்த 20 ஆம் திருத்ததிற்கு திடீரென ஆதரவு வழங்கியமை தான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.


நேர்மையான சிந்தனை உள்ளவர்கள் இந்த செயலை இன்னும் வியப்போடு தான் பார்க்கின்றனர். குர்ஆன், ஹதீஸை முன்னிருத்தி தங்களை பலப்படுத்திக் கொண்ட கட்சியைச் சேர்ந்த இவர்கள் எதிர்க்கட்சியோடு ஒன்றாக இயங்கி அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து பெரும் நம்பிக்கைத் துரோகத்தில் ஈடுபட்டமை மக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை எமக்குத் தெரிகின்றது.


இவர்கள் திடீரென தடம் மாறியமைக்கு காரணம் என்ன, அரசோடு இவர்களுக்குள்ள டீல் என்ன என்பது குறித்தெல்லாம் பொதுமக்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள். பொதுமக்களை எப்போதும் உணர்ச்சி வசப்படுத்தி ஏமாற்ற முடியாது என்பதையே இது தெளிபடுத்துகின்றது.


எரிபொருளுக்கு வரிசை. எரிவாயுவுக்கு வரிசை. பால்மா பெற முடியாது. இரவுபகல் பாராது தொடர்ச்சியான மின்வெட்டு. வருமானம் அதிகரிக்காத நிலையில் பொருட்களின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு இவைதான் இன்றைய நாட்டு நிலைமை. இதனால் பொதுமக்கள் எதிர்நோக்கும் அவலங்களும், பிரச்சினைகளும் சொல்ல முடியாது.


பொதுமக்களுக்கு இவ்வளவு சோகங்கள் இருந்தும் 20க்கு ஆதரவு வழங்கியோர் இன்று வாய்மூடி மௌனமாக இருக்கின்றனர். பொதுமக்களின் வாக்குகளினால் அதிகாரத்துக்கு வந்தவர்கள் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கொஞ்சமாவது கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது கருத்துக்களாவது சொல்ல வேண்டும். இவை எதுவுமில்லாத அளவுக்கு அவர்களது டீல் அவர்களைக் கட்டிப்போட்டுள்ளது. அவர்களை மௌனிக்கச் செய்துள்ளது


இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »