பிரான்ஸில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காததையடுத்து, முதல் சுற்று தோ்தலில் இரு இடங்களைப் பிடித்த தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும், மரீனே லீ பென்னும் இரண்டாவது சுற்று தோ்தலில் போட்டியிட உள்ளனா்.
பிரான்ஸில் அடுத்த ஜனாதிபதியைத் தோ்ந்தெடுப்பதற்கான முதல் சுற்று தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய மரீனே லீ பென் உட்பட 12 போ் போட்டியிட்டனா்.
இதில் மேக்ரானுக்கும், மரீனே லீ பென்னுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. முதல் சுற்று தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில் மேக்ரான் 27.8 சதவீத வாக்குகளும், மரீனே லீ பென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றனா்.
முதல் சுற்று தோ்தலில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் மேலான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முதல் இரு இடங்களைப் பிடித்த மேக்ரானும், மரீனே லீ பென்னும் அடுத்த சுற்று தோ்தலில் மோதவுள்ளனா். அடுத்த சுற்று தோ்தல் ஏப்ரல் 24ஆம் திகதி நடைபெறும். அதில் மேக்ரான் 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறுவாா் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.