Our Feeds


Monday, April 18, 2022

ShortNews Admin

சாய்ந்தமருதுவை சேர்ந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: வீடியோவை காண்பித்து 10 இலட்சம் ரூபா கப்பமும் கோரல்! ஏறாவூரை சேர்ந்தவர் உட்பட இருவர் கைது!



(பாறுக் ஷிஹான்)


13 வயது சிறுமியை  பாலியல்  துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தியதுடன் வீடியோ ஒன்றைக் காண்பித்து  10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக மிரட்டி வந்தார்கள் எனக் கூறப்படும் இருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி சிறுமியின் தாயாரினால் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 13 வயதான தனது மகளை 3 சந்தேக நபர்கள் வீடியோ காணொளி ஒன்றை  காட்டி  கப்பம் கேட்பதாக கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய பொலிஸார் 3 சந்தேக நபர்களையும் அடையாளம் கண்ட நிலையில் தேடுதல் மேற்கொண்டு  வந்தனர். எனினும் சந்தேக நபர்களில் ஒருவரான சாய்ந்தமருது 3 ஐச் சேர்ந்தவர் துபாய் நாட்டுக்கு தப்பி சென்ற நிலையில் ஏனைய சந்தேக நபர்களில் கப்பம் கோரியவரான மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபர் கல்முனை பகுதி உணவகம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்தச் சம்பவத்துக்கு உடந்தையாகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் 31 வயதுடைய ஒருவர் சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைதானார்.

குறித்த இரு சந்தேக நபர்களையும் பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற சந்தேக நபரை கைது செய்ய நீதிமன்ற நடவடிக்கை ஊடாக சர்வதேச பிடியாணை உத்தரவைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்கள் கஞ்சா ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையுடன் தொடர்புடையமை பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »