Our Feeds


Monday, March 14, 2022

Anonymous

PHOTOS: ஆபத்தான நிலையில் காணப்படும் கல்முனை மாநகர வடிகான் மூடிகள் | புலம்பும் பொதுமக்கள் - கவனமெடுக்குமா மாநகர சபை?

 


(எம்.என்.எம். அப்ராஸ்)


அம்பாரை மாவட்டம் கல்முனை  மாநகர சபை பிரிவில் உள்ள வீதியில் காணப்படும் வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்துள்ளமையினால் வீதியூடான போக்குவரத்து  செய்யும் பொது மக்கள்  பெரும்  சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.


குறிப்பாக சாய்ந்தமருது ஒராபி பாஷா வீதியின் குறுக்காக உள்ள வடிகான் மூடிகள் நீண்டகாலமாக உடைந்து காணப்படுவதுடன் இதனால் வீதியில் போக்குவரத்து செய்யும்  மக்கள்  விபத்துக்களை சந்திப்பதாக  தெரிவிக்கின்றனர்.


கல்முனை சாஹிரா தேசிய  பாடசாலை பின் பக்க நுழைவாயில் உள்ள குறித்த வீதியின் முன்னால் வடிகான் மூடிகள்  உடைந்து காணப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


குறித்த  வீதியின் ஊடாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் வீதியில் உள்ள பொது மக்கள் தங்களது போக்குவரத்தினை பெரும் சிரமத்திற்கு மத்தியில் பயன்படுத்தி வருவதாகவும் வீதியில் காணப்படும் வடிகான் மூடி சேதமடைந்துள்ளமையினால் போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாகவும் ஆபத்தாகவும் காணப்படும் வடிகானினால் வாகனங்கள் சேதமடையக் கூடிய நிலை உள்ளதாகவும், வீதியின் குறுக்காக உள்ள வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்து காணப்படுவது  பற்றி எவ்விதமான

முன்னாய்த்த அறிவுறுத்தல் இல்லையெனவும் இதனால் விபத்துக்களை  சந்திக்க நேரிடுவதாகவும் குறித்த விடயம் தொடர்பில் கல்முனை  மாநகர சபைக்கு  தெரியப்படுத்தியும் இது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும்மேற்கொள்ளவில்லை எனவும் வீதியிலுள்ள பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


பாடசாலை  மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உரிய வடிகான் மூடியினை புனரமைத்து தருமாறு பொதுமக்கள் பிரதேச அரசியல்வாதிகள் ,உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர். 


இதே வேளை கல்முனை  மாநகர சபை பிரிவில் கல்முனை ,சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள ஏனைய வீதிகளில் வடிகான் மூடிகள்  சேதமடைந்த நிலையில்  காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »