யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள மூன்று தீவுகளில் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இலங்கை மற்றும் இந்தியா நேற்று (28) கைச்சாத்திட்டுள்ளன.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்திய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் உறவுவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
காலி மாவட்டத்திலுள்ள 200 பாடசாலைகளுக்கு நவீன கணினி கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் பலகைகளை வழங்கும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையில் விசேட இலத்திரனியல் அடையாளஅட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அத்துடன், சமுத்திர பாதுகாப்பு தொடர்பு மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு மற்றுமொரு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையிலுள்ள மீனவத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் வகையிலான உடன்படிக்கையொன்றும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும், சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் ஐபிரிட் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.