பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தங்களது நிறுவனம் தொடர்ந்தும் பெற்றோல் மற்றும் டீசல் விற்பனையில் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 15 ரூபாவும் ஒரு லீற்றர் டீசலுக்கு 65 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக அந்த நிறுவனத்தின் முகாமையாளர் மனோஜ் குப்தா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், நேற்று நள்ளிரவு முதல் தமது சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளையும், 49 ரூபாவினால் அதிகரித்தது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 303 ரூபாவாகும்.
அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 332 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இந்த ஆண்டு, முதல் தடவையாக கடந்த மாதம் ஆறாம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்தது.
அன்றிலிருந்து மூன்று வாரங்களின் பின்னர் கடந்த 11 ஆம் திகதி பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றின் விலைகளை மீள அதிகரித்திருந்தது.