கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கவிடாமல் பலாத்காரமாக எரித்ததன் சாபமே இந்த அரசாங்கம் தடுமாற்றமடையக் காரணம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
“மின் துண்டிப்பு” என்ற பெயரில் – இந்த சாபம் இன்று அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.
மருதமுனை – மசூர் மௌலானா விளையாட்டரங்கில் 19) இடம்பெற்ற “ரிஷாத் பதியுதீன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின்” பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸஹ்ரான் என்ற கொடூரன் செய்த செயலுக்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிறையிலடைத்தார்கள். ஆன்மீகத் தலைவர்கள், சட்டத்தரணி ஹிஜாஸ் – நான் உட்பட ஆஸாத் சாலி போன்ற அரசியல் வாதிகளையும் அநியாயமாக சிறையிலடைத்தார்கள்.
ஆனால் – இவற்றை நன்கு தெரிந்தும் , இந்த ஆட்சியாளர்களை பலப்படுத்த எமது வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் எம்பீக்கள் 20க்கு கை உயர்த்திய பாவத்தை- முஸ்லிம் சமுகம் மிக வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சியாளர்கள் குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் அச்சம் நீக்கப்பட வேண்டும். அவர்கள் புரியும் அட்டூழியங்களை தட்டிக் கேட்கப்பட வேண்டும். இந்த ஆட்சியாளர்களை எதிர்ப்பது பெரும் ஆபத்தென்றும் இதற்காகத்தான் நாங்கள் கை உயர்த்தினோம் என்று யாராவது கூறுவார்களாக இருந்தால் அதனை யாரும் நம்ப வேண்டாம்.
நாம் பயந்த சமுகம் அல்ல. எமது வரலாற்றை சற்று பின்னோக்கிப் பாருங்கள் என்று இளைஞர் சமுகத்திடம் கேட்டுக் கொள்கிறேன். குற்றம் இழைத்தவன் தான் பயங்கொள்வான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.