இந்தியாவின், கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் முஸ்லிம் மாணவிகள் அங்குள்ள கல்லூரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வர்ஷினி கல்லூரி நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள உத்தரவில், "முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரதடை விதிக்கப்பட்டுள்ளது. சீருடை அல்லாத மற்ற உடைகளை அணிந்து வரக் கூடாது" என கூறப்பட்டுள்ளது. இதனால் நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்குத் திரும்பினர்.
இதுகுறித்து பி.ஏ. முதலாண்டு படிக்கும் மாணவி ஒருவர் கூறும்போது, “ஹிஜாப் அணிந்து வந்ததால் கல்லூரிக்குள் செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து நான் திரும்பி வீட்டுக்குச் செல்கிறேன்" என்றார்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாக அதிகாரி பீனா உபாத்யாயா கூறும்போது, “கல்லூரிக்குள் மாணவிகளுக்கு சீருடை விதிமுறை உள்ளது. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். கல்லூரி விதிமுறைகளை அனைத்து மாணவ, மாணவிகளும் பின்பற்றவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.
இந்தக் கல்லூரியானது ஆக்ராவிலுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகத்துடன் இணைப்பில் உள்ளது. 1947-ல் அமைக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் 7 ஆயிரம் பேர் வரை படித்து வருகின்றனர். அதில் 60 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் ஆவர். மேலும் அதில் 250 முஸ்லிம் மாணவிகள் பயின்று வருகின்றனர்