இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு என்பது 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அரசியல், பொருளாதாரம், வணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 48-வது மாநாடு பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றினார். அப்போது அவர் காஷ்மீர் மற்றும் பாலஸ்தீன விவகாரங்களை எழுப்பினார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இம்ரான்கான் பேசுகையில், பாலஸ்தீனம் மற்றும் காஷ்மீரில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். இந்த விவகாரங்களில் நாம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை சோகத்துடன் கூறுகிறேன்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை மேற்கத்திய நாடுகள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. நாம் (இஸ்லாமிய நாடுகள்) பிரிந்து உள்ளோம். பல நாடுகள் (இந்தியா, இஸ்ரேல், மேற்கத்திய நாடுகள்) அதை தெரிந்துகொண்டுள்ளன.
நாம் (முஸ்லிம்கள்) 1.5 பில்லியன் மக்கள். ஆனால் இந்த அப்பட்டமான அநீதியைத் தடுக்க நமது குரல் போதுமானதாக இல்லை’ என்றார்.
மேலும், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ இந்தியா ரத்து செய்ததை மேற்கொள்காட்டி பேசிய இம்ரான்கான், ‘காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் இந்தியா எந்தவித அழுத்தத்தையும் உணரவில்லை. நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு பழைய நிலைக்கு திரும்பிவிடுவோம் என்று இந்தியா நினைத்துவிட்டது.
வெளி நபர்களை காஷ்மீரில் குடியமர்த்தி காஷ்மீரின் மக்கள் தொகையில் மாற்றத்தை இந்திய கொண்டுவருகிறது. இதை யாரும் எதிர்க்கவில்லை. எனென்றால் நாம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதவர்கள் என்று இந்தியா நினைத்துள்ளது’ என்றார்.