முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ச்சியாக பயன்படுத்த அனுமதித்தமை தொடர்பில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 07, மஹகமசேகர மாவத்தை (பெஜெட் வீதி) வீட்டை அவருக்கு தொடர்ச்சியாக பயன்படுத்த அனுமதி வழங்கியமை தொடர்பில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துள்ள நீதிமன்றம் இம்முடிவை அறிவித்துள்ளது.
இம்மனு இன்றையதினம் (29) உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு மாத கால அவகாசத்தின் அடிப்படையில் குறித்த இடைக்காலத் தடை அமுல்படுத்தப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருந்தபோது, கொழும்பு பெஜெட் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாகவும், அமைச்சரவைக் கூட்டமொன்றின் மூலம் ஓய்வு பெற்ற பின்னர் அந்த வீட்டில் தங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முறையற்ற கையாளுகை தொடர்பான அரசியலமைப்பின் 12(1) ஆவது பிரிவு மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள குறித்த மனுவை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி பரிசீலித்த உச்ச நீதிமன்றம் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்திருந்தது.
குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (CPA) மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் மைத்திரிபால சிறிசேனா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆஜராகியுள்ளதோடு, சட்டத்தரணி சுரேன் பெனாண்டோ அவருக்கு ஆதரவு வழங்குகிறார்.
மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த மனுவை பரிசீலிக்க குறைந்தபட்சம் ஐவரடங்கிய நீதிபதிகள் கொண்ட நீதியரசர் குழாமை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.