இன்று நாடு முழுவதிலுமுள்ள வீதிகளில் நமது நாட்டின் பிரஜைகள் தொடுக்கின்ற நியாயமான கேள்விகளுக்குப் பதில் தேடுகின்ற விதமாகவே நாம் இங்கு கூடியிருக்கிறோம். நாடு எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுவே நமது தலையாய இலக்காகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
பிரச்சினைகளுக்கு விடை தேடுவதில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை என்பவற்றையே ஆரம்ப அடிப்படை வாக்குறுதியாக உங்கள் முன் நாம் முன்வைக்க விரும்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக யுத்த காலங்களில் மாத்திரமல்லாது தப்பிப் பிழைப்பதற்காக சமாதானம் சிரமப்படும் போதும் கூட உண்மைகள் மறைக்கப்படுவது இயல்பானதே.
மார்ச் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாடு தெளிவான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுப்பதனை தெரியப்படுத்தினார். நாட்டு மக்கள் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியை வெற்றி கொள்ள வேண்டும் என்பது அவரது கோரிக்கையாகும். அவர் பயன்படுத்திய பிரதான வார்த்தை “மக்களின் ஒருமைப்பாடு” என்பதாகும். அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறான ஒரு தேசிய நெருக்கடியில் அரசியல்வாதிகள், பல்துறை நிபுணர்கள் ஒருமித்து தீர்வொன்றைக் காண முன்வர வேண்டியது காலத்தின் கட்டயாமாகும். எனவும் குறிப்பிட்டார்.
மக்களைப் பிரிக்க எத்தனிக்கும் அல்லது அவர்களிடையே பிளவுகளை உருவாக்க எத்தனிக்கும் சக்திகள் குறித்து நாம் விழிப்பாக்க இருக்க வேண்டும். உள்நாட்டுப் பிளவுகள் எப்போதும் வெளிச்சக்திகளின் தலையீட்டுக்கு ஏதுவாக அமையலாம். பொருளாதார வீழ்ச்சி கூட வெளிச்சக்திகள் நமது நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கும் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கும் எதுவாக அமையக்கூடும்.
பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக நமது ஒத்தாசைகளை வழங்கவே நாம் இங்கு கூடியிருக்கிறோம். அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்தியதனை விடவும் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மோசமானது என நாம் நம்புகிறோம். முதலில் நாம் மக்கள் மீது நம்பிக்கை வைத்து உண்மையை உள்ளவாறு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். இலங்கை வங்குரோத்து நிலைமைக்குச் செல்லுகிறது. என்பது கசப்பான உண்மையாகும். அப்பாவியான இலங்கை மக்கள் மீது அழுத்தம் செலுத்தத் தொடங்கியுள்ள அத்தகையதொரு அவலமான நிலைமையின் பாரதூரமான பின்விளைவுகளை உடனடியாகவும், வினைத்திறனுடனும் தவிர்க்க வேண்டியது நம் முன் உள்ள உடனடிச் சவாலாகும்.
தற்சமயம் நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் ஒரு இடைக்காலத் தீர்வாக நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட பின்வரும் தீர்வை உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புவதுடன் இதனை அரசுகளுக்கிடையேயான அடிப்படையில் உடன் அமுல்படுத்தும் கடப்பாட்தையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
நாட்டின் அவசரத் தேவையாக நாங்கள் கணக்கிட்டுள்ள வெளிநாட்டுச் செலாவணியின் பெறுமதி வெறுமனே 500 மில்லியன் அமெரிக்க டொலர்களோ அல்லது ஒரு பில்லியன் டொலர்களோ அல்ல… மாறாக ஐந்து தொடக்கம் ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இத்தொகையில் கணிசமான தொகை உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்காகவும் மீன்பிடிக் கைத்தொழில், விலங்கு வேளாண்மை போன்ற துறைகளை மேம்படுத்துவதற்காகவும் முன்னுரிமை அடிப்படையில் ஒடுக்கப்பட வேண்டும். அதே போன்று மீதித்தொகை பழைய கடன்களை மீளச்செலுத்துவதற்காகவன்றி எரிபொருள், மின்சாரம், சக்தி தேவைப்பாடுகள் எனபவற்றை மக்களுக்குத் தடையின்றி வழங்குவதன் மூலம் நாடு அதல பாதாளத்தில் வீழ்ந்து விடாமல் தங்கு தடையின்றி இயங்குவதனை உறுதி செய்யு முகமாக ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால், பிரச்சினை என்னவெனின் அரசு ஒரு பில்லியன் டொலர்களை கடுமையான நிபந்தனைகளின் கீழ் அண்டைய நட்பு நாடுகளிடமிருந்து பெற முனைவதுடன் இலகுவாக ஐந்து அல்லது ஆறு பில்லியன் டொலர்களை திரட்டக்கூடிய வழி வகைகளில் நம்பிக்கை வைக்கத் தவறியுள்ளது. அடுத்து, இத்தொகையை இலகுவாகப் பெறக்கூடிய எண்ணெய் வளம் பொருந்திய மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை அரசு உரிய முறையில் நாடவில்லை என்பது கவலைக்கிடமானதாகும்.
தேசத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலக்குத் தொகையான ஐந்து அல்லது ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாகப் பெறும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் முயற்சியில் இறங்க நாம் தயாராக உள்ளோம் என்ற தகவலை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். வருடாந்தம் 7 பில்லியன் அளவு நிகர வருமானம் இந்த நாடுகளில் தொழில் புரியும் ஊழியர்களின் ஊடாக நமக்கு கிடைக்கின்றது என்ற மாபெரும் உண்மையை நாம் மறந்துவிட முடியாது.
அண்மைக்கால வரலாற்றை நினைவுபடுத்த எம்மை அனுமதிக்கவும். மக்கள் வினவும் பிரதான கேள்வி “ எமது அனைத்துத் தேசியச்சொத்துக்களுக்கும் என்ன நடந்தது”? எமது வெளிநாட்டுச் செலாவணி வருமானம் எங்கு சென்றது.? என்பதாகும். கொவிட்-19 ன் தாக்கமும் நமது தற்கால நிலைமைக்கு வழிகோலிய ஒரு விடயம் என்பதும் நினைவுகூறப்பட வேண்டும். வேறு பலர் ஆட்சியிலிருந்த கடந்து சென்ற அரசாங்கங்களில் இடம்பெற்ற அளவுக்கதிகமான ஊழல், மோசடிகளே இந்த நிலைமைக்கு காரணம் எனக் குற்றம் சுமத்துகின்றனர். அதே வேளை நாடு எதிர் நோக்கும் பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு அரசின் முகாமைத்துவ மடி;டங்களின் தவறான தீர்மானங்கள், துர் முகாமைத்துவம், தீர்மானம் நிறைவேற்றுவதில் தாமதம், என்பனவற்றை குறை கூறுபவர்களும் இல்லாமலில்லை.
ஆனாலும் இவை அனைத்துமே பகுதியளவிலேயே இந்த நிலைமைக்குக் காரணம் என்பதே எமது நிலைப்பாடாகும். ஆனால், உண்மை அதுவல்ல! இலங்கை சுதந்திரமடைந்து 74 ஆண்டுகாலமாக இன ரீதியான முரண்பாடுகளுக்கு நாம் முகம் கொடுத்து வந்துள்ளோம். இப்பிரச்சினைகள் சகல அரசுகளினாலும், சகல சமூக அரசியல் வாதிகளாலும், அதிகமான மதத்தலைவர்களாலும் ஊடகங்களாலும் உயிர்ப்பிக்கப்பட்டு வந்துள்ளன.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையில் வாழும் இனங்களுக்கடையிலான ஒருமைப்பாடு பரிமாணங்களுக்கு அப்பால் சிதைக்கப்பட்டமை கவலைக்குரியது.
இன்றைய ஆட்சியாளர்கள் உதவிக்கரம் நீட்டுகின்ற நாடுகளின் நிபந்தனைகளின் பாதகம் குறித்துக் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு ஓரம் கட்டப்பட்டுள்ளனர். எமக்கு டொலர்கள் மிகவும் அத்தியாவசியம்! நாம் யுத்தத்தை வென்றாலும் நாட்டை இழந்துவிட்டோம்.
நாட்டை விட்டு வெளியேறியவர்கள் பலமானவர்கள், அனால் நாடு என்ற வகையில் நாம் உதவியின்றி ஓரம் கட்டப்பட்டுவிட்டோம். எமது கோரிக்கை இலங்கையர்கள் அனைவரும் சரி சமமானவர்களாக மதிக்கப்படவேண்டும் என்பதாகும். எமது நாடு பல்லின , பன்மத , பல் கலாசார , பன் மொழி நாடாக தொடர இனியும் வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முதன்மை நிலையைக் கேள்விக்கு உட்படுத்த எவரும் முன்வரவில்லை. எனினும், மக்களைப் பிளவு படுத்தக் கூடிய வெறுப்புணர்வுப்பேச்சுக்கள், இன ரீதியான செயற்பாடுகள் அனைத்தும் கைவிடப்படவேண்டும் என்றார்.