உலக மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த போரில் இராணுவ வீரர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியப் படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
போர் தொடங்கி ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவால் நடத்தப்படும் போர் உக்ரைனுக்கு எதிரானது மட்டுமல்ல, சுதந்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்து உக்ரைன் ஜனாதிபதி காணொளியை வெளியுறவித் துறை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் காணொளியில் பேசியதாவது, “உக்ரைன் நாட்டையும், சுதந்திரத்தையும் ஆதரிக்க அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், வீடுகளிலிருந்து அனைத்து மக்களும் இன்று தெருக்களுக்கு வாருங்கள்.
போரை நிறுத்த வலியுறுத்தும் அனைத்து உலக மக்களும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.
இதற்கிடையே ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளனர்.