(எம்.மனோசித்ரா)
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறை மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக சவூதி அரேபிய உயர்மட்டக் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சவுதி தூதுவர் அப்துல் நாசர் ஹூசைன் அல் ஹார்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாகவும் சவூதி தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்துடன் தொடர்புடைய முதலீட்டு வாய்ப்புகளில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சவுதி அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.