Our Feeds


Wednesday, March 23, 2022

Anonymous

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் பிரச்சினை ஏற்படுத்த வேண்டாம் - கோட்டா அரசுக்கு ரனில் ஆலோசனை

 



(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


விடுதலைப் புலிகளுடனான யுத்தத்துக்கு போதுமான சட்டம் இல்லாமையினாலே பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. என்றாலும் தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் இந்த சட்டத்தை வைத்திருப்பதில் பயனில்லை. அதனால் சர்வதேச பயங்கரவாதத்துக்கு முகம்கொடுக்க முடியுமான முறையில் புதிய சட்டம் ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று நவீன புலனாய்வு பிரிவொன்றையும் ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை இயற்றுவதற்கு நானும் முன்னிலை வகித்தேன். விடுதலைப் புலி பயங்கரவாதிகளுடனான யுத்தத்துக்கு எமது சட்டம் போதுமானதாக இருக்கவில்லை. அந்த காலத்தில் வட அயர்லாந்தின் நிலைமை தொடர்பாகவும் நாங்கள் கருத்திற் கொண்டோம். அதன் பிரகார சட்டத்துக்கமையவே நாங்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உருவாக்கினோம்.

எனினும்  இந்தச் சட்டம்  பிற்காலத்தில் பிழையான முறையில் கையாளப்பட்டது.   எனினும் 2009இல் யுத்தம் நிறைவடைந்த பிற்பாடும் நாங்கள் இன்னும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தச்  சட்டத்தின் கீழ் 20 வருடங்களாக சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்களை விடுவிப்பதற்கு எந்தளவு கஷ்டப்பட வேண்டியுள்ளோம்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு பின்னர் வேறு விதமான பயங்கரவாதம் தலைதூக்கியது. தற்காலத்தை பார்க்கும்போது நாங்கள் அமைத்த சட்டம் போதுமானதாக இல்லை.  புதிய சட்டம் கொண்டுவர வேண்டியுள்ளது. தற்போது சர்வதேச பயங்கரவாதம் உள்ளது. எமது சட்டத்தினாலும் அதிலிருந்து பாதுகாப்பு பெற முடியுமான விடயங்கள் இருக்க வேண்டும். அதற்கு தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மேலும் நாட்டுக்கு திறமையான புலனாய்வு பிரிவொன்று இருக்க வேண்டும். பல வருடங்களாக நபர்களை கைது செய்து தடுத்து வைப்பதன் மூலம், அவர்களிடமிருந்து நாங்கள் எந்த தகவலை பெற்றுக் கொண்டிருக்கிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது முஸ்லிம் பெண்களின் ஆடையில் மறைத்துக் கொண்டு குண்டு கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்கள்.

முறையாக ஆராயாமல் செயற்படுவது பாதுகாப்பு கட்டமைப்பில் இருக்கும் பாரிய பிரச்சினையாகும்.  அதனால் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்தவேண்டாம். அது வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன . இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை விடுதலை புலிகளின் நடவடிக்கை என்றே தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பில் உண்மையை ஆராய்ந்து பார்க்காமலே தெரிவிக்கப்பட்டது. அதனால் புலனாய்வு பிரிவு சரியான தகவல்களை வழங்க வேண்டும்.

அதற்கு சிறந்த புலனாய்வு பிரிவு இருக்க வேண்டும். புதிய முறைமைகளில் பயங்கரவாதங்கள் தலைதூக்குகின்றன. அதனால் அதற்கு முகம்கொடுக்கும் வகையில் நவீன முறைமையிலான புலனாய்வுப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »