ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய பின்னடைவு எனவும் அதற்கு அந்த காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் மன்றில் முன்னிலையான போதே ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, எல்.டீ.பீ.தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டீ.நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று மூன்றாவது நாளாகவும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.