Our Feeds


Wednesday, March 23, 2022

Anonymous

முதலையுடன் போராடி தோழியின் மகனை காப்பாற்றிய சிங்கப்பெண் உம்மு சலாமாவுக்கு விருது - தேசிய விருதுக்கும் பரிந்துரை.

 



சலாமாவின் வீரத்திற்கு தேசிய விருது வழங்க பரிந்துரை


நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவில் பல மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் காணப்படுகின்றன. அதில் நிந்தவூர் 07ஆம் பிரிவு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவிதான் ஏ.எல். உம்மு சலாமா. சலாமா ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். மூன்று பிள்ளைகளின் தாய். இதில் இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உண்டு. இவர் பொதுச்சேவைகள், சமூக சேவைகளில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அதனால்தான் இவருக்கு மிகப்பெரிய பொறுப்பினை அவரது கிராம சேவைப்பிரின் பெண்கள் எல்லோரும் இணைந்து அவரைத் தலைவராக்கியுள்ளனர்.


இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நேற்று (22) மாலை, நிந்தவூர் பிரதேச செயலகத்தில் மாதர் கௌரவிப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.எம். ஹனீஃபின் நெறிப்படுத்தலில் கீழ், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையில் இந்த கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.


நிகழ்வின் போது ஒவ்வொரு மகளிரிற்கும் கௌரவங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், திடீரென விஷேட கௌரவ விருதுக்காக சலாமாவின் பெயர் உச்சரிக்கப்பட்டது. (கடைசி வரைக்கும் சலாமாவிற்கு இந்த விஷேட விருது கிடைக்கும் என்பதே தெரியாது) பெயர் உச்சரிக்கப்பட்டதன் பிறகு, சலாமா அந்த கௌரவத்தினைப் பெற்றுக்கொள்ள, இந்த கௌரவம் வழங்கப்படுவதற்கான காரணத்தினை, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹனீப் தெரியப்படுத்தினார். அப்போது இந்த நிகழ்வானது ஒரு நிமிடம் அதிர்ச்சியினால் உறைந்து போனது.!


இந்த அதிர்ச்சியின் பின்னால் உள்ள திகில் சம்பவமே இது..


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பசுமை விவசாயம் திட்டத்தின் கீழ் சேதனைப் பசளைகளை தயாரிக்கும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட அந்த சந்தர்ப்பத்தில் போது, இந்த திட்டமானது நிந்தவூர் பிரதேசத்திலும் அமுல்படுத்தப்பட்டது. இதில் சேதனைப் பசளைகளைத் தயாரிக்க நைதரசன் ஊட்டச்சத்தை வழங்க பிரதானமானக தேவைப்படும் "சல்வீனியா" எனும் ஆற்று வாழையினை சேகரிப்பதற்காக சலாமாவின் நண்பி தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், 


சலாமாவின் நண்பியுடன் அவரது மகனும் தாயுடன் செல்ல ஆசைப்பட, தாய் தனது மகனை அழைத்துச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், சமூக சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவரும் எந்த வேலையையும் உட்சாகமாக செய்யக் கூடியவருமான சலாமாவினையும் உதவிக்கு தனது நண்பி அழைக்க, இவர்கள் ஆற்று வாழையினை சேகரிப்பதற்காக நிந்தவூர் கொளமுருட்டி ஆற்றுக்குச் சென்றிருந்தனர். 


இடையில் ஆற்றங்கரையோரம் வளர்ந்திருந்த பொன்னாங்கனியினை பறித்து  முடித்ததன் பிறகு, சேதனப் பசளை தயாரிப்பதற்குத் தேவையான ஆற்று வாழையினை தானும், தனது நண்பியும் சேகரித்துகே கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென மிகப்பெரிய முதலையொன்று சலாமாவின் நண்பியின் மகனின் இடது காலைக் கவ்விக் கடித்துக் கொண்டது. 


"உம்மா என்னை காப்பாற்றும்மா" என சிறுவன் அலர, மறுபக்கம் நண்பி தனது மகனைப் பிடிக்க, சலாமா அருகில் கிடந்த சிறிய கம்பை எடுத்துக் கொண்டு, உடனே முதலையின் மேல் பாய்ந்து, முதலையை நகர விடாமல், முதலையின் கழுத்துப் பகுதியில் கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளார். 


இதன் பின்னர் தனது நண்பியும், முதலை மேல் பாய்ந்து இருவருமாக முதலை ஒரு அங்குலம் கூட நகரவிடாமல் கட்டிப்பிடிக்க, இடையில் சலாமா முதலையின் கண்களின் மேலே கம்பினால் அடித்துக் கொண்டே இருந்துள்ளார். 


இது இறைவன் புறத்திலிருந்து தனக்கு வந்த தைரியம் என சபையோர் முன்னிலையில் கண்ணீர்மல்க எடுத்துரைத்தார். தான்  முதலைக்கு  மேல்  அமர்ந்திருந்த  அந்த  சந்தர்ப்பத்தில் "யா அல்லாஹ்.. இந்த பிள்ளையை நீயே காப்பாற்றி தருவாயாக" எனும் பிரார்த்தனையுடன்,  தனது நண்பியின் மகனை சுமார் 15 நிமிட போராட்டத்தின்பின் முதலையின் பிடியிலிருந்து மீட்டெடுத்து, ஆற்று படுக்கையில் இருந்து உயரத்திற்கு தூக்குவதற்கு உதவிக்கு பலரை அழைத்தும் கூட, யாரும் அந்த நேரத்தில் நேசக்கரம் நீட்டாமல் ஒழிந்திருந்ததை தனது உரையில் வேதனையோடு சுட்டிக்காட்டினார்.


சிறுவன் தனது உடைந்த காலை தனது இருகைககளால் தாங்கி பிடிக்க தாயும் தானும் தூக்கி சென்று முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்றோம் எனவும், பல மாதங்கள் சிகிச்சை மேற்கொண்டதன் பிற்பாடு, தற்போது தனது நண்பியின் மகன் தேக ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர் தற்போது எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் நடப்பதாகவும் தனது அனுபவத்தை சபையில் விபரித்தார் வீரமங்கை.


சலாமாவிற்கு நடந்த இந்த சம்பவமானது இதுவரைக்கும் எந்த ஊடகங்கள் மூலமாகவும், வெளிவராமல் இருந்த சந்தர்ப்பத்தில், நிந்தவூர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வி. நாஸிர் ஹசன் இவருக்கு ஓர் விஷேட விருதொன்று வழங்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்க, அதனை ஏற்றுக்கொண்டு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.எம்.  ஹனீஃப் இவரை இவ்விருதுக்கு தெரிவு செய்து செயலகத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் சேர்த்துக் கொண்டமை மூலமே இந்த வீர மங்கையின் இவ்வீரச்செயல் வெளியாகியுள்ளது.


இதனிடையே இங்கு உரையாற்றிய  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் அவர்கள் :


ஆண்டுதோறும் தேசிய ரீதியில், துணிச்சல் மிக்க செயல்களை செய்த வீரர்களுக்கான விருதுகளை வழங்குவதற்கான விண்ணப்பத்தில், அம்பாறை மாவட்ட ரீதியில் இந்தப் பெண்ணின் பெயரினை விருதுக்கு பரிந்துரைத்து, இவரின் இந்த வீரத்தனத்தினை முழு தேசத்திற்கும் தெரியப்படுத்தி, ஏனைய பெண்களும் துணிச்சலான பெண்மணிகளாக உருவாக்க வழிசமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


பெற்ற தாய் ஒருவர் தனது மகனை காப்பாற்ற போராடுவது இயற்கை நியதி. ஆனால் வேறு ஒரு ஒருவரை அல்லது ஓருயிரை காப்பாற்ற தன்னுயிரையும் பொருட்படுத்தாது, செயற்படுவதே வீரதீர செயலாகும்.


சிங்கப்பெண், சிங்கப்பெண் என்று வெறும் பாடல்களில் மட்டுமே நாம் கேட்டிருப்போம் அல்லது பார்த்திருப்போம். ஆனால் உண்மையான சிங்கப்பெண்ணாக தன் உயிரையும் துச்சமென நினைத்து தன் வீரத்தினை நிரூபித்திருப்பது சிங்கப்பெண்ணுக்கான உண்மையான வரைவிலக்கணமாகும். இன்னும் எத்தனை எத்தனை சலாமாக்கள் நம் தாய்த்திருநாட்டில் உருவாக்கப்போகிறார்களோ தெரியாது.! 


(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் றாபி)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »