ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளைய தினம் (23) இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ள நிலையில், அதன் பங்காளிக் கட்சி என்ற அடிப்படையில், மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பனவும் மாநாட்டில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காது என அதன் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.