முன்னாள் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் வினைத்திறனற்ற செயற்பாட்டின் காரணமாக எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என உதய கம்மன்பில மக்கள் மத்தியில் குறிப்பிட்டதை தொடர்ந்து பொதுமக்கள் வழமைக்கு மாறாக எரிபொருளை கொள்முதல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அன்றிலிருந்து எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோக கட்டமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது ஓமான் நாட்டிலிருந்து எரிபொருள் பெற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு அவர் முழு நாட்டு மக்களையும் ஏமாற்றினார் அமைச்சின் விடயதானங்களை முறையாக செயற்படுத்தாமலிருந்ததன் விளைவை தற்போது எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது என்றார்.