(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஹோட்டல்களில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரிகளான சகோதரர்களின் தந்தை இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம் சார்பில் பிணை கோரிக்கை முன்வைக்க அவரது சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் அவரது சட்டத்தரணிகள் இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம் உள்ளிட்ட மூவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றவியல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இப்ராஹீம் ஹாஜியாருக்கு மேலதிகமாக அவரது மேலும் இரு புதல்வர்களே அவ்வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம், மொஹம்மட் இப்ராஹீம் ஹிஜாஸ் அஹமட், மொஹம்மட் இப்ராஹீம் இஸ்மாயீல், ஆகியோரே இவ்வழக்கின் பிரதிவாதிகளாவர்.