உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையைத் தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக ஃபின்லாந்து பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில்
இலங்கை 127-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.சா்வதேச மகிழ்ச்சி நாள் ஆண்டுதோறும் மாா்ச் 20-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐ.நா. நீடித்த வளா்ச்சிக்கான தீா்வுகள் அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டது. தொடா்ந்து 10-ஆவது ஆண்டாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.
மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. கணக்கெடுப்பின்போது மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிா்ணயிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), ஆயுள்காலம், வாழ்வில் முடிவெடுப்பதற்கான சுதந்திரம், சமூக ஆதரவு, மக்களின் பெருந்தன்மை, ஊழல் உள்ளிட்டவை தொடா்பாக ஆராயப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காலத்தில் நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டன, மக்களின் நலன் குறித்து நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
மொத்தம் 146 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஃபின்லாந்து தொடா்ந்து 5-ஆவது முறையாக உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. டென்மாா்க், ஐஸ்லாந்து, ஸ்விட்சா்லாந்து, நெதா்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 136-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுக்கான அறிக்கையில் 139-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 3 இடங்கள் முன்னேறியுள்ளது.
சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு முன்னிலையில் உள்ளன. இந்தப் பட்டியலில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. லெபனான், ஜிம்பாப்வே, ருவாண்டா, போட்ஸ்வானா ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு முந்தைய இடங்களில் உள்ளன.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள்
1 ஃபின்லாந்து
2 டென்மாா்க்
3 ஐஸ்லாந்து
4 ஸ்விட்சா்லாந்து
5 நெதா்லாந்து
6 லக்ஸம்பா்க்
7 ஸ்வீடன்
8 நாா்வே
9 இஸ்ரேல்
10 நியூஸிலாந்து
11 ஆஸ்திரியா
12 ஆஸ்திரேலியா
13 அயா்லாந்து
14 ஜொ்மனி
15 கனடா
16 அமெரிக்கா
17 பிரிட்டன்
18 செக் குடியரசு
19 பெல்ஜியம்
20 பிரான்ஸ்
இறுதி இடத்தில் உள்ள நாடுகள்
137 ஜாம்பியா
138 மலாவி
139 தான்சானியா
140 சியரா லியோன்
141 லெசோதோ
142 போட்ஸ்வானா
143 ருவாண்டா
144 ஜிம்பாப்வே
145 லெபனான்
146 ஆப்கானிஸ்தான்
இந்தியாவும் அண்டை நாடுகளும்
72 சீனா
84 நேபாளம்
94 வங்கதேசம்
121 பாகிஸ்தான்
126 மியான்மா்
127 இலங்கை
136 இந்தியா