சுமார் 15 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறி, கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின்கீழ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது. நேற்றைய தினம் அந்த வழக்கு கொழும்பு பதில் பிரதான நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று (24) வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சார்பில் மன்றில் ஆஜரான பொலிஸ் அதிகாரி, இந்த விவகாரத்தில் விசாரணை கோவை சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் இதுவரை ஆலோசனை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினராக நாமல் ராஜபக்க்ஷ கடமையாற்றியபோது, சட்டவிரோதமாக உழைத்த 15 மில்லியன் ரூபா பணத்தை என்.ஆர். கன்சல்டன்சி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் அதள் ஊடாக கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் குற்றம் ஒன்றைப் புரிந்துள்ளதாகவும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ, சுதர்ஷன பண்டார, நித்யா செனானி சமரநாயக்க, சுஜானி போகொல்லாகம ஆகியோரே இவ்வழக்கின் சந்தேக நபர்களாவர்.