இலங்கையின் வான் வெளியானது, 29 மில்லியன் டொலருக்கு இந்தியாவுக்கு விற்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஹப்புத்தளையில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
இலங்கையில் இன்று மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மக்கள் வீதியில் செத்து மடிகின்றனர் என்று தெரிவித்த அவர், இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பு எனக் கூறி எமது இலங்கை வான் வெளி இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.
நேற்றைய அமைச்சரவையில் ஏழெட்டு தீர்மானங்கள் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இலங்கைப் பெருங்கடல் மற்றும் நிலம் சீனாவுக்கு வழங்கப்பட்டதாகவும் துறைமுகம் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டதாகவும் இப்போது இந்தியாவுக்கு 29 மில்லியன் டொலர்களுக்கு வான் வெளி விற்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
விற்பனை செய்வதற்கு முடிவே இல்லை என்றும் இந்தியாவின் பாரத் எலக்ரோனிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.