Our Feeds


Friday, March 25, 2022

ShortNews Admin

ஸஹ்ரானின் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டதாக கூறப்பட்ட 16 பேருக்கு சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய பிணை!



(எம்.எப்.எம்.பஸீர்)


உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிம், தாக்குதலுக்கு முன்னர் நடத்திய பயிற்சி முகாம்களில் பங்கேற்றதாக கூறப்படும் 16 சந்தேக நபர்கள் சுமார் 2 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் இருந்த நிலையில் இன்று (25) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, தலா ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தார். இதன்போது பிணையாளர்களாக கையெழுத்திடும் நபர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என நீதிவான் நிபந்தனை விதித்தார்.

அத்துடன் ஒவ்வொரு ஞாயிறு தினத்திலும் முற்பகல் 9.00 மணிக்கும் நண்பகல் 12. 00 மணிக்கும் இடையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »