Our Feeds


Wednesday, March 30, 2022

ShortNews Admin

பாரிய மின்சார நெருக்கடி – 12 மணி நேர மின் துண்டிப்பு அமுலாக்கும் நிலை ஏற்படுமா?



மின்சார நெருக்கடி மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


மின்தடை குறித்து நேற்றிரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 12 மணி நேர மின் துண்டிப்பு அமுலாக்க அனுமதி கோரப்பட்டது, எனினும், இந்த நிலைமை ஓரளவுக்கு குறைப்பதற்காக, கையிருப்புக்கு அவசியமான குறிப்பிடத்தக்க அளவான எரிபொருளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது தற்போது ஏற்படும் நிலைமை அவ்வளவு சிறந்ததாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையான காலப்பகுதிக்குள் 10 மணிநேர மின்துண்டிப்பு அமுலாக்குவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விருப்பமின்றியேனும் மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்களில், 800 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை இல்லை.

நிதி பிரச்சினை காரணமாகவே மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஒழுக்கம் தொடர்பான பிரச்சினையால் நிதி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் எரிபொருள் கப்பலொன்று நாட்டை வந்தடைந்தது.

ஆனால் அந்த கப்பலை விடுவிப்பதற்கான டொலர் தற்போது இல்லை.

எனவே, அரச நிறுவனங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைமை ஏற்படுத்தி, இந்த நிலைமையை ஓரளவுக்கு முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கத்திடம் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

10 மணிநேர மின்சாரத்தடை எனும்போது, மதிய நேரத்தில் முழுமையாக மின்சாரம் இல்லை.

இதேநேரம் இந்திய கடன் வசதி எல்லையில், எதிர்வரும் 31 ஆம் திகதியே மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது.

முதலாம் திகதி தான் அந்தக் கப்பலில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே, அடுத்து வரும் சில நாட்களில் மிகவும் சிக்கலான நிலையிலேயே அனைவருக்கும் வாழவேண்டி ஏற்படும்.

கூடிய அளவில் வைத்தியசாலை உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு மாத்திரமே மின்சாரத்தை விநியோகிக்ககூடிய இயலுமை உள்ளது.

அதேநேரம், சுதந்திர வர்த்தக வளையத்திற்கு மின்சாரத்தை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால், மீண்டும் மழையுடனான காலநிலை ஏற்படும் வரையில், இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்து, முழுமையாக மின்சாரத்தை வழங்கக்கூடிய இயலுமை இல்லை.

இந்த நிலையில், அடுத்துவரும் 2, 3 ஆண்டுகளுக்குள் மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்காவிட்டால், இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அரசாங்கத்திற்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் தாங்கள் அறியப்படுத்தி உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »