இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றையும், முஸ்லிம்கள் இலங்கைத் தாய் நாட்டிற்கு ஆற்றிய அரும்பெரும் பணிகளையும், இந்நாட்டின் உரிமைக்காக போராடிய முதன்மை மக்கள் முஸ்லிம்கள் என்பதையும் ஆதாரத்துடன் நிலைநிறுத்தியுள்ள காத்தான்குடி பூர்வீக நூதன சாலை மீண்டும் திறக்கப்பட்டுதுள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் வந்தான் வரத்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் பேரின சக்திகளால் முன்வைக்கப்பட்ட போது இந்த நாட்டின் முஸ்லிம்கள் வந்தான் வரத்தான்கள் அல்ல இந்த நாட்டின் உரிமைக்காக போராடியவர்கள் என்பதை பேரின சக்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி M.L.A.M ஹிஸ்புழ்லாஹ் அவர்களின் முயற்சியால் காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்ட பூர்வீக நூதனசாலை கொரானா நிலமை காரணமாக கடந்த இரண்டு வருடமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பூர்வீக நூதனசாலையை தொடர்ந்தும் பொறுப்பெடுத்து நடத்துவது யார் என்றொரு கேள்வியும் எழுத்திருந்த நிலையில் நூதனசாலையை காத்தான்குடி நகர சபை பொறுப்பேற்று நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வரலாறுகள் தொகுக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை பார்வையிடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தர ஆரம்பித்துள்ளனர்.
ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இந்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறுகள் முறையாக தொகுக்கப்படாமலும் அதற்குறிய ஆதாரங்கள் சேகரிக்கப்படாமலும் இருந்த நிலையில் முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் சுமார் 10 வருட அயராத முயற்சியின் பலனாக நாட்டின் பல பாகங்களுக்கும் வெளிநாடுகளின் பல இடங்களுக்கும் சென்று இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான ஆதாரங்களை தேடியெடுத்து தொகுத்ததுடன் மட்டுமல்லாமல் அவற்றை மக்கள் பார்வைக்காக தத்ரூபமான காட்சிப் படுத்தியமையும் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சிக்கு கிடைத்த பலனாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக குறித்த நூதனசாலையில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான வரலாறுகளுக்கான ஆதாரங்கள் எவையும் முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய நூல்களையோ, குறிப்புகளையோ அடிப்படையாக கொண்டமைந்தவை அல்ல. மாறாக முஸ்லிமல்லாத பேரறிஞர்கள், எழுத்தார்கள், ஆய்வாளர்கள் மற்றும் தேச சஞ்சாரிகளின் எழுத்துக்கள் கட்டுரைகள் மற்றும் ஆய்வு நூல்களையே அடிப்படை ஆதாரங்களாக கொண்டு குறித்த நூதனசாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.
நூதனசாலையின் இறுதிப் பகுதி அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம்களின் வரலாறுகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதை காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.