“நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் எண்ணிக்கை முக்கியமல்ல பெரும்பான்மை ஆதரவு என்பதும் முக்கியமல்ல. ஆனால், மக்கள் அணிதிரண்டு வீதிக்கு வந்தால் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடவேண்டி வரும்” என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தாா்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும்போது சற்று முன் இதனை தெரிவித்தாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முறையாக செயற்படாவிட்டால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியினா் அவர்களின் ஆர்ப்பாட்டத்தினூடாக அரசாங்கத்துக்கு கற்பித்துள்ளனா். மக்கள் எதிர்ப்பு எங்கிருந்து கிளம்பும் என்பது எங்களால் சரியாக குறிப்பிட முடியாது.
அரசாங்கத்திடம் 150, 130, 140 பெரும்பான்மை இருக்கலாம். விமல் விரவங்ச சென்றால் 135 இருக்கும். தயாசிறி ஜயசேகர சென்றால் 127 இருக்கலாம். 127 உறுப்பினர்களுக்கும் பார்க்க மக்களின் எதிர்ப்பு பலமானது. அவர்கள் அணிதிரளும் போது அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்குச் செல்ல நேரிடும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பொய்யான எப்.சி.ஐ.டி ஒன்றை நியமித்து அப்போது எதிர்த் தரப்பிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினா்களை சிறைப்பிடித்தாா்கள். அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவையும் சிறைப்பிடித்தார்கள். பல்வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்தாா்கள். சிறையிலிருக்கும்போது அவரை நானும் நேரில் சென்று சந்தித்திருந்தேன். ஆகவே அவரின் மனதில் கட்டாயம் வைராக்கியம் இருக்கும்.
எது எவ்வாறாக இருந்தாலும் நான் மைத்ரிபால சிறிசேனவிடமும் செல்லவில்லை. ரணில் விக்ரமசிங்கவிடமும் செல்லவில்லை. பணம் செலவானாலும் என் மீது தாக்கல் செய்யப்பட்ட சகல வழக்குகளையும் தைரியமாக எதிர்கொண்டேன். ஆனால், தற்போதுள்ளவர்கள் பயங்கொண்டவர்கள். தற்போதுள்ளவர்கள் வெளியில் சென்று ஒன்றை கூறுகிறார்கள். மறுபுறம் பொலிஸாா் கைதுசெய்ய வருகிறார்கள் என்கிறாாகள். பின்னர் வைத்தியசாலையில் சென்று அமர்ந்து கொள்கிறாா்கள். அப்படியானவர்களே தற்போது இருக்கிறாா்கள். பெயர் குறிப்பிட மாட்டேன். காரணம் எதிர்காலத்தில் அவர்கள் எனக்கு தேவைப்படலாம். மக்கள் இந்த அரசாங்கத்துக்கு சாபம் விடுகின்றனா் என்றாா்.