எதிர்க் கட்சியின் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவரை பொலிஸாா், கைதுசெய்து தாக்கி அவரை கொலை செய்ததாக அந்தக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளாா்.
பனாமுரே பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக்க ஜயரத்ன என்பவர் இந்த நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும், அவர் தொடர்ந்து தனது மனைவி, குழந்தைகள் மீதும் தாக்குதல் மேற்கொள்பவர் என்று முறைப்பாடுகளில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.
தன்னை பொல்லால் தாக்கியதாக உயிரிழந்த நபரின் மகள் கடந்த 12ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், அன்றிலிருந்து சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
தலைமறைவாகியிருந்த நிலையில் அவர் நேற்று (16) இரவு 10 மணியளவில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதாகவும், காலையில் தனது ஆடையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளாா். அதன் பின்னா் அவரை பொலிஸாா் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
உயிரிழந்த நபருக்கும் போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டு முழுமையான பொய் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.