ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி இன்று (16) பிற்பகல் நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ள நிலையில, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பஸ்களின் ஊடாக ஆதரவாளர்கள் கொழும்பை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.
இந்நிலையில், பல பகுதிகளில் பொலிஸாரின் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே குறித்த பஸ்களை கொழும்புக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதாகவும், மேலும் சில பகுதிகளில் போராட்டம் நடைபெறும் இடம் தொடர்பில் தெளிவான தகவல்கள் வழங்கப்படாமையால் பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கட்சியின் எதிர்ப்பு பேரணிக்கு மக்கள் அழைத்துச் செல்லப்படுவதை தடை செய்யுமாறு நீதிமன்றங்களில் பொலிஸ் நிலையங்கள் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அநேகமான நீதவான் நீதிமன்றங்கள் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.