முன்ஸிப்
நாடாளுமன்றில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்டுள்ள அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பதில்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று 21ம் திகதி கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் உட்பட அந்தக் கட்சியின் 05 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மட்டுமே இன்றைய உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஏனைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு உடல் நலமில்லை என்ற காரணமாக கலந்து கொள்ளவில்லை என தமக்கு அறிவித்துள்ளதாக, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களிடம் கூறினார்.
ஏற்கனவே அரசாங்கம் கொண்டுவந்த 20ஆவது சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக மு.கா. தலைவர் ஹக்கீம் தவிர்ந்த, அந்தக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹாபிஸ் நசீர், ஹரீஸ், பைசல் காசிம், M.S தௌபீக் ஆகிய நால்வரும் ஆதரித்து வாக்களித்திருந்தனர்.
அதேபோன்று உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக மு.கா. தலைவர் ஹக்கீம் வாக்களித்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் எதிராக வாக்களித்ததோடு, சிலர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நழுவியமையும் குறிப்பிடத்தக்கது.
இம்முறையும் வாக்களிப்பில் கலந்துகொள்வதா? இல்லையா? என்ற முடிவெடுக்கும் முக்கிய உயர்பீடக் கூட்டத்தில் குறித்த MPக்கள் உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தை கூறி கலந்து கொள்ளாமல் தவிந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.