கொழும்பு - 12, வாழைத்தோட்டம் பகுதியில் காணாமற் போனதாக தெரிவிக்கப்படும் மூன்று சிறுமிகளும் வீடு திரும்பியுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று சிறுமிகளும் நேற்று முன்தினம் (08) முற்பகல் 8.00 மணியளவில் காணாமற்போயுள்ளதாக குறித்த பிள்ளைகளின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
குறித்த சிறுமிகள் தற்போது வாக்குமூலம் பெறுவதற்காக வாழைத்தோட்டம் பொலிஸிற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கர வண்டியொன்றில் அம்மூன்று சிறுமிகளும் நேற்று முன்தினம் (08) வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் நேற்று (09) இரவு அவர்கள் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 13 - 15 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளும் அவர்களுடைய உறவுமுறை சிறுமி ஒருவருமே இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றிற்கும் பொலிஸார் அறிக்கையளித்திருந்தனர்.
குறித்த மூவரும் சுற்றுலா ஒன்றை திட்டமிட்டு சென்றுள்ளதாக தற்போது வரை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
சிறுமிகள் மூவரும் நேற்றுமுன்தினம் கொழும்பு விகாரமாதேவி பூங்கா மற்றும் காலிமுகத்திடல் பகுதியில் நடமாடியுள்ளமை தொடர்பான CCTV காட்சிகள் பெறப்பட்டிருந்ததோடு, இவர்கள் கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கும் அங்கிருந்து கண்டிக்கும் சென்று மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளமை தெரிய வந்துள்ளது.
அத்துடன், இவர்கள் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்துள்ளமையும், பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
03 பெண் பிள்ளைகளும் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் காட்சி