அதிகார வரம்பைமீறி ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை குழப்புவதற்கு முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பெறுப்பு பொலிஸாருக்கு இருக்கின்றமை உண்மைதான். ஆனால் வரையறைகள் உள்ளன. அந்த எல்லையை அவர்கள் மீறக்கூடாது. எனினும், ஆளுங்கட்சியினரின் கட்டளையின்பிரகாரம் பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டதை நேற்று காணமுடிந்தது. அவர்களின் அணுகுமுறைகள் மிக மோசமானதாக இருந்தது.
இது தொடர்பான காணொளிகள் எம் வசம் உள்ளன. சட்டக்குழு ஆராய்ந்து வருகின்றது. எனவே, ஏதேச்சையாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”- என்றார்.