ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என எழுதப்பட்ட கடிதமொன்றை எதிர்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்கட்சித் தலைவரது பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தரினால் இந்த சம்பவம் குறித்து கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 9ம் திகதி இந்த முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
நவம்பர் மாதம் 16ம் திகதி கொழும்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணி மீது, குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைபாடு தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். (TC)