காணாமல் போன நிலையில் வீடு திரும்பிய மூன்று இளம் பெண்களையும் மனநல ஆலோசகர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மூன்று சிறுமிகள் தொடர்பிலான நன்னடத்தை அறிக்கையை பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மூன்று சிறுமிகளிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி எந்தவொரு குற்றச் செயல்களும் வெளிப்படுத்தப்படவில்லை என வாழைத்தோட்ட பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
அதன்படி குறித்த வழக்கை நிறைவு செய்ய பிரதான நீதவான் தீர்மானித்தார்.
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் உட்பட மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த போது குறித்த மூன்று சிறுமிகளும் மீண்டும் வீடு திரும்பியிருந்தனர்.
காணாமல் போன 13 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுமிகளும் இசை மற்றும் மேற்கத்திய நடனப் பயிற்சிக்காக பொருத்தமான இடத்தைத் தேடி வீட்டை விட்டு வௌியேறி இருந்ததாக தெரியவந்தது.
இசை மற்றும் மேற்கத்திய நடனத்தின் மீது நாட்டம் கொண்ட எமக்கு பெற்றோரிடம் இருந்து கடும் எதிர்ப்பு வௌியாகி இருந்த நிலையில் தாம் இந்த செயலை செய்ததாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர். (AD)