கிளிநொச்சி சிவபாத கலையக பாடசாலைக்கு முன்பாக பாலம் அமைப்பதற்காக வெட்டிய குழி மாணவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.
நேற்றைய தினம் பெய்த மழை காரணமாக ஆரம்பப் பிரிவுவைச் மாணவர்கள் இருவர் நீர் நிரம்பிய குறித்த குழிக்குள் வீழ்ந்த நிலையில் ஏனைய மாணவர்களினால் காப்பற்றப்பட்டுள்ளதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் கரைச்சி பிரதேச சபையினரால் பாலம் ஒன்று அமைப்பதற்கு பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் சுமார் நான்கு அல்லது ஐந்து அடி ஆழத்தில் குழி வெட்டப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறித்த குழியில் நிரம்பி நீர் செல்கின்றது. ஆழமற்ற குழி என கருதிய மாணவர்கள் அதனை கடந்து செல்ல முற்பட்டபோது தவறி வீழ்ந்துள்ளனர்.
இதனையடுத்து அதிஷ்டவசமாக ஏனைய உயர்வகுப்பு மாணவர்களால் அவர்கள் காப்பற்றப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான பகுதி என எந்தவிதமான எச்சரிக்கை சமிஞ்கையும் இல்லாத நிலையில், குறித்த பகுதி காணப்படுகிறது. இது தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும் அறிவித்துள்ளதாக பாடசாலை ஆசிரியர்கள் மேலும் தெரிவித்தனர்.
எனவே ஒரு விபரீதம் ஏற்பட முன்னர் பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.