கடந்த 06ம் திகதி கொழும்பு, துறைமுக நகரில் நடைபெற்ற தோணி ஓட்டப் போட்டியில் அனுராதபுர மாவட்டம் பலாகல தேர்தல் தொகுதில் அமைந்துள்ள பளளுவெவ முஸ்லிம் கிராமத்து இளைஞர்கள் கலந்து கொண்டு முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களை பெற்று சாதித்துள்ளனர்.
'ரெட்புல்' சார்பில் தேசிய மட்டத்தில் வருடாந்தம் நடத்தப்படும் தோணி ஓட்டப் போட்டி இவ்வருடம் கொழும்பு, துறைமுக நகரில் நடைபெற்றது. இதில் இரண்டாம் வருடமாகவும் கலந்து கொண்ட பளளுவெவ முஸ்லிம் கிராமத்து இளைஞர்கள் இன்றைய போட்டியில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கையின் மிகப் பிரபலமான கலாவெவ குளத்தின் மற்றொரு பகுதியான பளளுவெவ குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் குறித்த இளைஞர்கள் தமது வாழ்வாதாரத்துடன் கூடிய குறித்த போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் கலந்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்களுடன் ஐந்து வட்டப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியை தமதாக்கிக் கொண்டுள்ளனர்.
முதலிடம் பிடித்த குழுவினருக்கு 125000ம் பணப்பரிசும், இரண்டாம் இடம் பிடித்த குழுவினருக்கு 95000ம் பணப்பரிசும் கிடைத்துள்ளதுடன், வெற்றிக் கேடயங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
நண்ணீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் குறித்த இளைஞர்கள் முதல் தடவையாக கடலில் போட்டியில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே இந்த வரலாற்று வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளனர்.
குறித்த இளைஞர்களுக்கு பளளுவெவ மற்றும் திக்கெந்தியாய என்ற இரண்டு கிராமத்திலும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்புக் கிடைத்துள்ளது.
வெற்றி வாகை சூடிய இளைஞர்களை ஊர் மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்றதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து கௌரவித்துள்ளனர்.