(எம்.மனோசித்ரா)
டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர
சாதாரணதர மாணவர்களுக்கான நடைமுறைப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.இது தொடர்பில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை (24) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எவ்வாறிருப்பினும் செயன்முறை பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிடாவிட்டால் , மாணவர்களுக்கு உயதரத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்று கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் என்பன தெரிவித்துள்ளன.
அத்தோடு ஏதேனுமொரு வகையில் மீண்டுமொரு கொவிட் அலை ஏற்பட்டால் இந்த பரீட்சைகள் மேலும் கால தாமதமடையக் கூடும் என்பதோடு , முழுமையான பெறுபேறு வெளியிடப்படாமையின் காரணமாக இம்மாணவர்கள் உயதரத்தை தொடர்வதிலும் சிக்கல் ஏற்படும்.
எனினும் கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையால் நடைமுறை பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலம் போதுமானதல்ல என்பதை கல்வி அமைச்சு ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கு அறிவிக்கப்படும் என்றார்.