நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் சாதாரண தர மற்றும் உயர்தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளை மறுதினம் முதல் கட்டாயம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
10,11,12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு கொவிட்-19 தடுப்பு செயலணி பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரண்டு வருட காலமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பப் பிரிவுகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதேநேரம் 6 முதல் 9 ஆம் தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது, பரீட்சை நடவடிக்கைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை, சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை 50 சதவீத கொள்ளளவில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.