(இராஜதுரை ஹஷான்)
அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்தினால் பட்டினி கிடந்து எவரும் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி, ஆகிய பொருட்களின் விலை அதிகரிப்பு பெரியதொரு விடயமல்ல. கொவிட்-19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்துள்ளமைக்கு அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
மக்களிடமிருந்து அரசாங்கம் நிவாரணம் பெற வேண்டும்.என நிதியமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ குறிப்பிடவில்லை. மக்கள் மீது சுமை செலுத்தாத வகையில் வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டது ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அத்தியாவசிய பொருட்களை கட்டுப்படுத்தும் காலத்தில் நாம் தற்போது இல்லை. வர்த்தமானி ஊடான வர்த்தகர்களை கட்டுப்படுத்த முடியாது. அதன் காரணமாகத்தான் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட விலைக்கமைய விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருக்கும் சூழல் காணப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் எவரும் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி, சீமெந்து ஆகியவை பெரும் பிரச்சினையல்ல. அவற்றை காட்டிலும் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. கொவிட்-19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்தமைக்காக அரசாங்கத்துக்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.