(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவிக்கையில்,
முஸ்லிம் சமூகம் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டம் உட்பட பல பிரச்சினைகளுக்கு எமது சமூகம் முகம்கொடுத்து வருகிறது, இந்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ற வகையில் இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துடன் பேசி தீர்த்துவைப்பதா அல்லது இந்த பிரச்சினையை பேசி முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதா என்ற இரண்டு நிலைமையில் இருக்கிறோம். எமது மூத்த முஸ்லிம் அரச தலைவர்கள் அன்று முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை அவர்கள் ஆளும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்த்த வரலாறு உள்ளது.
அதேபோன்றுதான் தற்காலத்தில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலத்தில் கொவிட் -19 தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு எதிராக நாங்கள் அனைவரும் குரல் கொடுத்தோம். 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்துக்கு வாக்கெடுப்புக்கு வந்தபோது, அரச தலைவர்களுடன் கலந்துரையாடி எமது ஜனாஸா எரிப்பு, முஸ்லிம் தனியார் சட்ட பிரச்சினை போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு பொதுவான பொறிமுறை அமைக்கவேண்டும் என தெரிவித்து முஸ்லிம் காஸ்கிரஸ் உறுப்பினர் நால்வரும் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவரும் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தோம்.
அதேபோன்று முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட பிரச்சினை வந்தபோது அது தொடர்பில் நீதி அமைச்சருடன் கலந்துரையாடி அதில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான செயலணியின் தலைவராக ஞானசார தேரரை நியமித்ததன் மூலம் எம்மை பெரும் கோபத்துக்கு ஆளாக்கி இருந்தது. என்றாலும் அமைச்சர் அலி சப்ரியுடன் நாங்கள் இது தொடர்பாக கலந்துரையாடினோம். அதன் மூலம் அமைச்சர் ஜனாதிபதி, பிரதமருடன் சாமத்தியமான முறையில் பேசி, செயலணியின் அதிகாரங்கள் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளன
அதேபோன்று மாடறுப்பு தடை தொடர்பாகவும் நாங்கள் சமூக ரீதியில் அல்லாமல் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக கலந்துரையாடி, அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். அதனால் இதற்கு நல்ல முடிவு வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அத்துடன் எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எமது காணிகள் தொடர்பான தீர்மானம் அந்த ஆணைக்குழுவே எடுக்கப்போகிறது.
அரசாங்கத்தின் தீர்மானங்களுடன் இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலமே எமது பூர்விக இடங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் நாங்கள் எதிர்ப்பு அரசியல் செய்துவந்தால் இந்த பிரச்சினைகளை அரசாங்கத்துடன் யார் கதைப்பது? என்பதை எம்மை விமர்சிப்பவர்கள் தெரிவிக்கவேண்டும் என்றார்.
இதேவேளை, நஸீர் அஹமட் கூறுகையில், நாங்கள் 20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்த நாளிலிருந்து எங்களை விமர்சிக்க மாத்திரமே ஒரு சில கூட்டம் செயற்பட்டுக் கொண்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளை எவ்வாறு நாம் வெற்றிகொள்ள வேண்டும், அல்லது எவ்வாறு ஜனநாயக ரீதியிலே ராஜதந்திரமாக காய்நகர்த வேண்டும் என்பதை பற்றி புரிந்துகொள்ளாமல், நாட்டின் நிலைமைகளை புரிந்துகொள்ளாமல் வெறுமனே வெளியில் இருந்து பேசிக்கொண்டிருப்பதால் மாத்திரம் எந்தவொரு பயனையும் அடைந்துவிட முடியாது.
ஸஹ்ரானின் மூலம் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக முஸ்லிம் சமூகத்திடம் திட்டவட்டமான பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் நல்லாட்சி காலத்தில்தான் இந்த தாக்குதல் இடம்பெற்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஸஹ்ரானை பற்றி நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தில் கொடுக்கப்பட்ட நேரத்திலும் நல்லாட்சி அரசாங்கத்தில் யாருமே அதனை கவனத்தில் கொள்ளவில்லை. அதன் விளைவுகளே இவை அனைத்தும் என்பதை முஸ்லிம் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும். திகன பிரச்சினையும் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில்தான் இடம்பெற்றது.
அதேபோல் அரசாங்கத்தை எதிர்த்து நிற்பதால் நாம் எதனையும் சாதிக்க முடியாது. நாட்டிலே சிறுபான்மை சமூகமாக உள்ள நாம் அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் காய்களை நகர்த்தி எமது விடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் நாட்டுக்கு பங்களிப்பு செலுத்தும் சமூகமாக, முஸ்லிம் சமூகம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் எமது கண்ணியத்தை பாதுகாக்க வேண்டிய தேவையும் உள்ளது. எந்த இலாபத்துக்காகவும் இந்த அரசாங்கத்துடன் இணையவில்லை,
இவர்களிடமிருந்து ஐந்து சதமேனும் தேவையில்லை, எமது சமூகத்துக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கி வீசவும் நாம் தயாராகவுள்ளோம். ஆனால் எந்த இலாபமும் இல்லாது எந்த செயற்பாட்டையும் செய்யவில்லை, இதில் இராஜதந்திர நகர்வுகளை நாம் கையாண்டு வருகிறோம்.
நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் காரணத்தினால்தான், எமது சமூகம் சார்ந்த பல விடயங்களை பேசக்கூடியவர்களாக உள்ளோம். அரசாங்கத்தை தூற்றுவதால் மாத்திரம் எதனையும் சாதிக்க முடியாது. ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட வேளையில் எமது இரத்தம் கொதித்தது, இன்றும் அதனை எண்ணி நாம் வேதனையடைகிறோம். ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில்தான் ஓட்டமாவடியில் முதல் முதலாக இரண்டு ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. அப்போதும் ரணில் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்தும் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தனர். எனினும் இன்றைய ஆட்சியில் இடம்பெறும் செயற்பாடுகளை எவ்வாறு அடக்குவது என மிகக் கவனமாக கையாண்டு வருகின்றோம்.
அதேபோல் மாடறுப்பு விடயத்திலும், ஏனைய முஸ்லிம் பிரச்சினைகளில் தீர்வு காண கவனமாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். காணிப் பிரச்சினைகள் பல உள்ளன, அவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அரசங்கத்துடன் இணைந்து எமது தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறோம், அதில் நாம் வெற்றி காண்போம் என்றார்.