(இராஜதுரை ஹஷான்)
விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்மானங்கள் சிறுபிள்ளைதனமாக உள்ளது. தனியார் தரப்பினர் இரசாயன உரத்தை இறக்குமதி செய்யும் போது மாத்திரம் மனித உடலாரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாதா, அரசாங்கத்தின் முற்போக்கான தீர்மானங்களினால் விவசாயிகளுடன் நாட்டு மக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்க்கொண்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெட்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
மக்களாணைக்கு முரணாக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கிண்ணியாவில் ஆரம்பமாகியுள்ள மக்கள் போராட்டம் இனி நாடு முழுவதும் தொடரும் பாலம் இல்லாமல் ஆறுபேர் உயிரிழந்துள்ள நிலையில் களனி கேபிள் பாலத்தை அரசாங்கம் திறந்து வைத்துள்ளமை வெட்கப்பட வேண்டிய செயற்பாடு எனவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் சிறுபிள்ளை தனமாகவுள்ளது. இரசாயன உரம் பாவனை மனித உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அதனை தடை செய்தது.
சேதன பசளை திட்டம் வெற்றிப் பெறவில்லை அதனால் தற்போது உணவு பொருட்கள் உற்பத்தி வீழ்ச்சியடைந்து மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளன.
இரசாயன உரம் இறக்குமதிக்கு தனியார் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இரசாயன உரத்திற்கு அரசாங்கம் நிவாரணம் வழங்காத பட்சத்தில் அங்கு தனியார் தரப்பினர் ஆதிக்கம் கொள்வார்கள்.
தனியார் தரப்பினர் அதிக விலைக்கு இரசாயன உரத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்வார்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் எவ்வாறு இரசாயன உரத்தை பெறுவார்கள் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசாங்கம் எவ்வித திட்டங்களையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முற்றிலும் வெறுக்கத்தக்கதாக காணப்படுகிறது. பாலம் இல்லாத காரணத்தினால் படகில் சென்று உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த சம்பவம் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவ்வாறான நிலையில் களனி பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின் செயற்பாடு வெறுக்கத்தக்கதாக உள்ளது.
கிண்ணியா படகு விபத்து சம்பவத்தினால் ஆத்திரமடைந்த அப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது தாக்கதலை முன்னெடுத்துள்ளார்கள் எம்.எஸ் தௌபீக் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் என ஒரு சில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி வெளியாகியுள்ளன அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அவருக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
மக்களாணைக்கு முரணாக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் கிண்ணியாவில் ஆரம்பமாகியுள்ளது உர பற்றாக்குறை காரணமாகவும், வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்க் கொண்டுள்ளார்கள் ஆகவே அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் இனி கவனமாக செயற்பட வேண்டும் மக்கள் போராட்டம் இனி தீவிரமடையும் என்றார்.