நாடாளுமன்றத்தில் இன்று (24) புதன்கிழமை, அமைச்சரவை அறிவிப்பை முன்வைத்த கிராமிய வீதிகள் , ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா, கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம் குறித்து அனுதாபங்களை வெளிப்படுத்தினார்.
இதன்போது அவர் கூறுகையில், சகல ஊடகங்களிலும் இந்த செய்தி பிரதான செய்தியாக மாறியுள்ளது. கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை கவிழ்ந்ததில் உயிரிழந்த சிறுவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கும் எனதும் அரசாங்கத்தினதும் ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றேன். அதேபோல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகலரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் மக்கள் நீண்டகாலமாக கலப்பை பயன்படுத்திய காரணத்தினால் பாலமொன்று இல்லாத நிலைமையே காணப்பட்டது. பாதுகாப்பில்லாத முறையில் இவர்கள் படகுகளை பயன்படுத்திக் கொண்டனர். அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக இருந்தது தமக்கு பாலம் ஒன்று வேண்டும் என்பதேயாகும். நல்லாட்சி காலத்திலும் பல அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினாலும் குறித்த பாலத்தை நிர்மாணிக்க முடியாது போயிருந்தது.
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய தௌபீக் எம்பியும் குறித்த பாலத்தை புனரமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்திருந்தார்.
குறித்த பகுதியில் மூன்று பாலங்கள் நிர்மாணிக்க வேண்டியுள்ளது, அதில் ஒரு பாலத்தை புனரமைக்க அடிக்கல் நாட்டினேன். இந்த பாலத்தை முழுமைப்படுத்தும் வரையிலும் மாற்று வீதியை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபை மாற்று வீதியை பயன்படுத்தவே அனுமதி வழங்கியிருந்தது.
இவ்வாறான நிலையில்தான் கிண்ணியா நகர சபை தமக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்க வியாபாரி ஒருவருக்கு இந்த படகுப்பாதையை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.