அரசாங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.கடந்த வார இறுதியில் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தையினைய டுத்து, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் இந்த எம்.பிக்கள் நிதியமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய அந்த பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் இந்த எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே அரசுக்கு ஆதரவை வழங்கிவருவதாக தெரிவித்துள்ள இந்த எம்.பிக்கள், அரசு அவற்றுக்கு முன்னுரிமை கொடுக்காத பட்சத்தில் அரசுக்கு ஆதரவளிப்பதில் எந்தப் பலனும் இல்லையென்றும் சுட்டிக்காட் டியுள்ளனர்.
இதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பெசில், முஸ்லிம்களின் உடனடி பிரச்சினைகளை பட்டியலிட்டு தருமாறு கேட்டுக்கொண்டார். அத்துடன், நீதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான முஸ்லிம் எம்.பிக்கள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்தவாரம் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தாம் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்தே, அரசின் வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மேற்படி முஸ்லிம் எம்.பிக்கள் தீர்மானித்துள்ளனர்.
எவ்வாறாயினும் கட்சித் தலைவர்களான ஹக்கீம் மற்றும் ரிஷாட், அரசை எதிர்த்தே வாக்களிப்பார்கள் என அறியமுடிந்தது.
வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில், ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள முஸ்லிம் எம்.பிக்கள் சிலரை தவிர இதர அனைவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை தெரிந்ததே.
-அரசியல் செய்தியாளர்-