முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 30 பேருக்கு கடந்த 15 மாதங்களாக உயரடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஆளுநர்கள் குழுவிற்கும் உயரடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாநகர சபையொன்றின் முன்னாள் முதல்வர் ஒருவருக்கும் பல வருடங்களாக பாதுகாப்பு வழங்கி வந்த நிலையில், அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் கடந்த வாரம் நீக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற மக்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவில் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சிறப்புரிமைப் பாதுகாப்பு வழங்குவதற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் எதிர்ப்புத் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதன் அடிப்படையில் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இவ்வாறு உயரடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது என பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் இந்த தேர்ந்த மெய்ப்பாதுகாவலர்களை போராட்டங்களுக்காகவும் தமது வியாபார நடவடிக்கைகளுக்காகவும் அழைத்துச் செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஆராயவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.