நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இன்று (03) அல்லது நாளை (04) மின் தடை ஏற்படாது என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய, மின்சார சபைத் தலைவர் M.M.C.பெர்டினேன்டோ இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற மின் தடை வழமைக்கு கொண்டுவரப்படாது என கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறுகின்றார்.
அவ்வாறான எந்தவொரு அறிவிப்பும் தொழிற்சங்கம் தமக்கு அறிவிக்கவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று (03) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக எரிபொருள், துறைமுகம், மின்சாரம் ஆகிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினால் கொழும்பில் இன்று (03) இந்த பாரிய எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவிக்கின்றார்.
மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தமது அனைத்து ஊழியர்களும் சுகயீன விடுமுறையில் இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த பணிப் பகிஷ்கரிப்பு அல்லவெனவும், இது எதிர்ப்பு போராட்டம் எனவும் அவர் கூறுகின்றார்.
இந்த எதிர்ப்பு போராட்டத்தில் பங்குப்பற்றுவதற்காக தமது அனைத்து ஊழியர்களும் கொழும்புக்கு இன்று வருகைத்தரவுள்ளமையினால், இன்றைய தினம் மின்சாரம் தடைப்படுமானால், மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வர தாமதம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், தொழிற்சங்கத்தினால் வெளியிடப்பட்ட கருத்தை, இலங்கை மின்சார சபையின் தலைவர் நிராகரித்துள்ளார்.