அவிசாவளை − பன்றிக் தோட்டத்தில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது.
பன்றிக் தோட்டத்திலுள்ள லயின் குடியிருப்பொன்றிலுள்ள வீடொன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, தோட்ட அதிகாரி பலவந்தமாக, குறித்த வீட்டை உடைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீட்டின் வயோதிப பெண்ணை, தோட்ட அதிகாரி இதன்போது தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, வயோதிப பெண்ணின் மகன்மார் தோட்ட அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான தோட்ட அதிகாரி மற்றும் வயோதிப பெண் ஆகியோர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்தை அறிந்து, குறித்த பகுதிக்கு சிவில் ஆடையில் வருகைத்தந்த பொலிஸார் என கூறப்படும் சிலர், தோட்ட அதிகாரி உடைத்த வீட்டை மீண்டும் உடைத்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.
இதையடுத்து பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளனர்.
இந்த நிலையில், பன்றிக் தோட்டத்தில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது.
இதேவேளை, வீட்டை தாம் உடைக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், பொலிஸார் சிலரை கைது செய்துள்ளதாக அறிய முடிகின்றது.