உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் சிரியாவில் ISIS பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் பங்குபற்றவில்லை என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (11) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பாக நான் இங்கு ஒன்றைக் கூற வேண்டும். சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். பயங்கரவாதப் பயிற்சிப் பெற்ற எந்தவொரு நபராலும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த விடயத்தை யாரும் அரசியல் மயப்படுத்தக்கூடாது. விசாரணை அறிக்கைகளை ஏன் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை என்பதுவே எமது கேள்வியாகும்.
சாதாரணமாக எந்தவொரு ஆணைக்குழுவில் விசாரணைகள் நடக்கும்போதும் சாட்சிகளின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றின் அறிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டுதான் வருகிறோம்.
இவற்றை சபையில் இருந்து மறைக்க முடியாது. அவ்வாறு விசாரணைகளை மறைப்பது எமது வரப்பிரசாதங்களை மீறும் செயற்படாகும்.
தாக்குதல் இடம்பெற்ற உடனனேயே, பொலிஸாரும் சி.ஐ.டியினரும் இணைந்துதான் பொரளை உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருந்த சூத்திரதாரிகளை கைது செய்தார்கள். மாறாக புலனாய்வுப் பிரிவினர் அல்ல என்பதையும் நான் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.