Our Feeds


Tuesday, November 9, 2021

SHAHNI RAMEES

Facebook பயன்படுத்தும் 8 பேரில் ஒருவருக்கு பெரும் உளவியல் பாதிப்பு - ஆய்வில் தகவல்.

 

360 மில்லியன் மக்கள் முழுமையாக அடிமையாகியுள்ளதாக ஆய்வில் தகவல் உலகளவில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தும் எண்மரில் ஒருவருக்கு தொழில், உறவுகள், தூக்கம் ஆகியவற்றைப் பாதிக்குமளவுக்கு உளரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் 360 மில்லியன் மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் உள்ளக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் அறிக்கைகள் ஊடகங்களுக்கு கசிந்தமையால் இவ்விடயங்கள் தெரியவந்துள்ளன.

இந்த சமூக வலைத்தளமானது பயனர்களின் தொழில், உறவுகள், தூக்கம் ஆகியவற்றின் மீது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளமை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், பேஸ்புக் வலைத்தளமானது கட்டாயப் பயன்பாடுடையதாக மாறியுள்ளதன் விளைவே இதுவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேஸ்புக் செயலியை தொடர்ச்சியாக உபயோகிப்பதன் காரணமாக தொழில் முறைகளில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. தொழிலில் கவனம் செலுத்த முடியாமை, உரிய நேரத்தில் தொழில் இலக்குகளை நிறைவுசெய்ய முடியாமை, ஆரோக்கியமான தொழில் சூழலில் பங்கேற்க முடியாமை போன்ற பிரச்சினைகள் எழுகின்றன. இதன் காரணமாக பேஸ்புக் பயனர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், பலர் தூக்கமின்மையால் தவிக்கின்றனர். தினமும் இரவில் பேஸ்புக் செயலியை பயன்படுத்திப் பழகியதால், அதிலிருந்து மீள்வதற்கு சிரமமாகவுள்ளதாகவும் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக உளவியல் பாதிப்பு உள்ளிட்ட மேலும் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அத்துடன், 10 வீதமான அமெரிக்கர்களும் 25 வீதமான பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியர்களும் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகி யுள்ளதாக ஆய்வுறிக்கைகள் தெரிவித் துள்ளன.

இதேவேளை, பேஸ்புக் பயனர்களின் நலன்விருத்தி குறித்து ஆராய்வதற்காக நிபுணத்துவக் குழுவொன்று அந்நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு விசேட பரிந்துரைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அந்த நிபுணத்துவக் குழுவின் செயற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

அத்துடன், பேஸ்புக் நிறுவனமானது அதன் ஊழியர்கள், பயனாளர்களின் நலனில் அக்கறைகொள்ளாமல் இலாபமீட்டுவதை மாத்திரமே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, இது குறித்து பேஸ்புக் நிறுனத்தில் பணியாற்றிய விலவிக பிரேன்சஸ் ஹோகன் என்பவர் பகிரங்கமாக தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இவ்வாறானதொரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »