Our Feeds


Thursday, November 11, 2021

Anonymous

சஹ்ரானை CID அதிகாரிகள் சந்தித்தார்களா? ஹரீன், மனுஷ ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வீரசேகர பதில் - VIDEO

 


ஈஸ்டர் தாக்குதல்தாரி சஹ்ரானை அவரின் வீட்டில் வைத்து புலனாய்வு அதிகாரிகள் சந்தித்ததாக, சஹ்ரானின் மனைவி எந்தவொரு விசாரணையின் போதும் கூறவில்லை என்றும், அவ்வாறு புலனாய்வு அதிகாரிகளை சஹ்ரான் சந்தித்தார் என்பது பொய் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் இன்று (11) தெரிவித்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் நாடாளுமன்றில் கடந்த செவ்வாய்கிழமை முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு இன்று பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.


சஹ்ரானை அவரது இல்லத்தில் புலனாய்வு அதிகாரிகள் சந்தித்ததாக சஹ்ரானின் மனைவி சாட்சியமளித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ கூறியிருந்தார்.


2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி கெலனிகம நுழைவாயிலில் இரண்டு லொறிகள் கைப்பற்றப்பட்டதாகவும், அவை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டதாகவும் ஹரீன் பெனாண்டோ மேலும் தெரிவித்திருந்தார்.


ஹரீன் பெனாண்டோ குறிப்பிட்ட லொறிகளில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததாகவும், இரண்டு லொறிகளையும் விடுவிப்பதற்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மேலும் கூறியிருந்தார்.


இந்த நிலையில் இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய சரத் வீரசேகர; மேற்படி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.


சஹ்ரானை அவரின் வீட்டில் வைத்து உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்ததாக சஹ்ரானின் மனைவி எந்தவொரு விசாரணையின் போதும் கூறவில்லை என்றும், அது பொய் என்றும் அமைச்சர் வீரசேகர கூறினார்.


சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் வெடிபொருட்களுடன் கூடிய லொறி ஒன்று விடுவிக்கப்பட்டதாக ஹரீன் கூறிய மற்றைய குற்றச்சாட்டையும் மறுத்த சரத் வீரசேகர; அந்த லொறி அலங்கார மீன்களை ஏற்றிச் சென்றதாக மாத்திரமே விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.


அதன்பின்னர், நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி இவறறினைக் கூறுவதை விடுத்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே இந்தக் குற்றச்சாட்டுகளை கூறுமாறு அமைச்சர் சரத் வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோவுக்கு சவால் விடுத்தார்.


மேற்படி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தருமாறு இதன்போது அழைப்பு விடுத்த அமைச்சர் சரத் வீரசேகர; ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்து, சஹ்ரானின் மனைவி, அவ்வாறு எங்கு தெரிவித்துள்ளாள் என்பதைக் காட்டுமாறும் சரத் வீரசேகர இதன்போது கூறினார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »