புதிய வகை கொரோனா தொடா்பான முழு விவரங்களும் அறிவியல்பூா்வமாக தெரியவரும் வரை நாடுகள் தங்களது எல்லைகளை மூட வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
எனினும், அந்த அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் தென்னாபிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகின்றன.
இஸ்ரேலில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக உலகின் எந்த நாட்டிலிருந்தும் பயணிகள் வருவதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் கடந்த 24ஆம் திகதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களையும் தொற்றி வருகிறது.
‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள அந்த வகைக் கரோனா, கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை வகைப்படுத்தியது. மேலும், கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமைக்ரான்’ எனவும் அந்த அமைப்பு பெயரிட்டது.