திருகோணமலை-கிண்ணியா-குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலத்தை இயக்கிய மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிண்ணியா-குறிஞ்சாக்கேணியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று கூடி, விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலை 07.00 மணியளவில் பாடசாலைகள் மாணவர்கள், முதியோர் மற்றும் தொழிலுக்குச் செல்வோர் என சுமார் 20 இற்கும் மேற்பட்டோருடன் பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
கிண்ணியா குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருவதால், குறித்த பகுதியூடாகப் பயணிப்பதற்கு தற்காலிகமாக இந்த களப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. 7.30 மணியளவில் படகு கவிழ்ந்த போதிலும் நேற்று பகல் 1 மணி வரையும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.